Heart Attack:தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருக்கும் தோழன் தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்று விட்டால் நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் அதோடு உங்கள் வாழ்க்கையும் முடிவாகிவிடும். அதனால் இதயத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வது மிக மிக அவசியம்.
இதயத்தின் பணி:
ஒவ்வொருவரின் இறுக மூடிய கையளவே கொண்ட இதயத்தில் இதய வெளியுறை(Pericardium), இதய மேலுறை(Epicardium), இதயத்தசை(Myocardium), இதய உள்ளுறை போன்ற பகுதிகளைக் கொண்டது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தமனிகளிலும், சிரைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரத்தச் சுழற்சி செய்யும் முக்கியப் பணியினை இதயமும் இரத்தக் குழாய்களும் முறையே செய்து வருகின்றனர். நுரையுுரல்களில் இருந்து பிரணவாய்வும், ஜீரண உறுப்புகளில் இருந்து சத்துப் பொருட்களையும் உடலின் எல்லா உறுப்புகளுக்கும், எல்லா திசுக்களுக்கும் இரத்த சுழற்சியின் மூலம் கொண்டு செல்வதுதான் இதயத்தின் முக்கியப் பணியாகும்.
இதய நோய் வகைகள்:
- இதய நோயில் ஒருவகை பிறப்பிலேயே உண்டாகிறது(Congenital Heart Diseases)
- முடக்குவாத நோயினால் உண்டாகும் இதய நோய்கள்(Rheumatic Heart Diseases)
- இதயத்தசைகளில் உண்டாகும் நோய்கள்(Cardiomyopathies)
- இதய வெளி, உள்ளுறை நோய்கள்(Pericardial Diseases)
- இரத்தத்தில் கொழுப்பு மிகுதலால் உண்டாகும் இதய நோய்கள்(Hyperlipidea mias)
இவ்வாறு பல்வேறு பரிமாணங்களை இதய நோய் கொண்டுள்ளது. இந்நோயின் இறுதிக்கட்டம் மாரடைப்பு என்னும் கொடுமையான நிகழ்வு - நோயாளிக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
மாரடைப்பு உண்டாகக் காரணம்:
சர்க்கரை வியாதி மற்றும் இரத்த கொதிப்பு மாரடைப்பிற்கு காரணமாகலாம்.
இரத்தத்தில் கொழுப்பு மிகுதல் மற்றும் இரத்த நாள உட்சுவர்களில் கொழுப்புத் திவலைகள் படிவதாலும் மாரடைப்பு உண்டாகலாம்.மது, புகை, புகையிலை இவையும் மாரடைப்புக்கு முன்னுரையாய் இருக்கலாம்.முதுமை மற்றும் பாரம்பரிய மரபுத்தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம்.மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கை சூழல் மாரடைப்பை வரவேற்கலாம்.அதிக உடற்பருமன், ஊளைச்சதையும்,பெருந்தீனியும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமாகலாம்.
அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
வெண்ணைய்,நெய்,வனஸ்பதி, தாவர எண்ணெய்கள், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தவிர்த்தல். எண்ணெயில் வறுத்த உணவுகள், அசைவ உணவுகள், கடலைமாவுப் பதார்த்தங்கள் தவிர்த்தல். மதுபானங்கள், புகையிலை, சிகரெட் போன்ற போதையை தவிர்த்தல். முட்டை, உப்பு போன்றவற்றை குறைவாக எடுத்தல். அளவுக்கு அதிகமாய் டீ, காபி அருந்துதலை தவிர்த்தல். உடலுறவில் அதிக வேகம் காட்டுவது, உறவுக்காக ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்தல்.இவற்றை எல்லாம் கடைபிடித்தால் நெஞ்சு வலி வருவதை அறவே தவிர்க்கலாம்.
இதய நோய் உருவாகும் விதம்:
பிறவியே உண்டாகும் இதய நோய்களைத் தவிர பிற இதய நோய்கள் திடீரென உண்டாகி விடுவதில்லை. முதலில், பிற நோய்களால் உருவெடுத்து,சார்பு நோய்களாய் உருவெடுத்து, சார்பு நோய்களாய் இதய நோய்களையும் உண்டாக்குகின்றனர்.
இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டு, முறையாய் உணவை உண்டு, தனிமனித ஒழுக்க முறையைக் கையாண்டால் கண்டிப்பாய் இதய நோய் குணமாகும்.
முதல் அவசியம் தண்ணீர்:
இதய நோயை தடுப்பதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோயால் இறந்தவர்கள் பெரும்பாலும் விடியற்காலையில்(4-8 மணிக்கு) தான் இருப்பார்கள். காரணம் என்னவென்று தெரியுமா? நாம் தூங்கும் போது உடம்பினுள் நீரின் அளவு குறைந்து இரத்த ஓட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, இரத்தம் கெட்டியாகும். இதனை சரி செய்ய தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் போதுமான அளவு(1 கிளாஸ்) நீர் அருந்தினால் போதும். இரத்தம் சீராக அதனுடைய பணிகளை செய்யும். மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம்.
கீழே இதய நோயினை குணமாக்கும் வல்லமை பெற்ற சில உணவு வகைகளை வகைப்படுத்துகிறேன். இதைதினமும் சாப்பிடும் உணவுமுறைகளுடன் பழக்கப்படுத்திக்கொள்ளும் இதயங்கள் கண்டிப்பாய் வலிமைப் பெரும். கவலை வேண்டாம்!...
இதயம் காக்கும் ஆவாரம்பூ:
'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியின் மூலம் இதன் சிறப்பை உணரலாம். ஆவாரம்பூ துவர்ப்புச் சுவை மற்றும் மல மிளக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதயத்தை வலுவாக்கும் தன்மை ஆவாரம்பூவிற்கு உண்டு.
ஆவாரம்பூ கூட்டு:
புத்தம் புதிய ஆவாரம் பூ 100 கிராம் அளவில் எடுத்து, காம்பினை எடுத்து, சூடான நீரில் அரைமணி நேரம் ஊரப் போடுங்கள். பின்னர் அதனை லேசான அலம்பி எடுத்து,தண்ணீர் - அரை லிட்டர், சிறுபருப்பு -200 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு. இவற்றுடன் ஆவாரம் பூவையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இறக்கி கீரையை கடைவதுப் போல் கடைந்து விடவும். இதனை உணவாக சாப்பிட, உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைகிறது. இரத்தக் குழாய்களில் உண்டாகும் வைரஸ் தொற்று நோய் சரியாகுகிறது. குறிப்பாக, இருதய வீக்கம், இதய வலியும் குணமாகும்.
ஆவாரை மூலிகைத் தேனீர்:
- ஆவாரம் பூ- 100 கிராம்
- ரோஜாப் பூ - 50 கிராம்
- சுக்கு - 25 கிராம்
- மிளகு - 10 கிராம்
- ஏலக்காய் - 10 கிராம்
- துளசி - 50 கிராம்
மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றிரண்டாய் இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேனீர் போல் தினசரி சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.
செம்பருத்திப் பூ கசாயம்:
- செம்பருத்திப் பூ - 10 எண்ணிக்கை
- துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
- சுக்கு - 5 கிராம்
- ஏலக்காய் - 5 கிராம்
மேலே குறிப்பிட்டுள்ளவற்றை 1/2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி சாப்பிட, இதய நோய்கள் அனைத்தும் தீரும்.
வேப்பம் பூ துவையல்:
வேப்பம்பூ - 50 கிராம், வெல்லம் - 30 கிராம், வறுத்த பற்றரிசி - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 3 எண்ணிக்கை, பூண்டுப் பற்கள் - 3 எண்ணிக்கை, உப்பு, புளி, எண்ணெய் தேவையான அளவு.
முதலில், வேப்பம்பூவை சுத்தம் செய்து, எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் பிறவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.சிறந்த சுவையான உணவு. வைரஸ் தொற்றால் உண்டாகும் இதய நோய் குணமாகும்.
இதய நோய் உள்ளவர்களின் கவனத்திற்கு!...
நெல்லிக்காய்,கடுக்காய், பிரண்டை தூதுவளை, பொடுதலை,கொள்ளு, வல்லாரை, முருங்கை இலை, புதினா, கருவேப்பிலை, முள்ளங்கி, இஞ்சி போன்றவற்றை சூப், அல்லது பிற உணவு முறைகளுடன் இணைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.

Social Plugin